Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வர மறுத்த டாக்டர்… மரணமடைந்த நோயாளி… உடலை வாங்க மறுத்த உறவினர்கள்..!!

தனியார் மருத்துவமனையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நபருக்கு சிகிச்சையளிக்க மருத்துவர் வர மறுத்த நிலையில், நோயாளி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தைச் சேர்ந்த முத்துகுமார் என்பவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.. இதனால் இவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று முத்துக்குமாருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து, பழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து இரவில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து, மருத்துவர் கருப்புசாமியை போன் மூலமாக தொடர்புகொண்டு மருத்துவ பணியாளர்கள் அழைத்துள்ளனர். ஆனால் மருத்துவர் வர மறுத்ததையடுத்து, உறவினர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு முத்துக்குமாரை  அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு முத்துகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக அரசு மருத்துவர் தெரிவித்தார். இதையடுத்து ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், முத்துகுமாரின் இறப்பிற்கு வர மறுத்த மருத்துவர் கருப்புசாமியே காரணம் என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த பழனி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துகுமாரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.. அதனைத்தொடர்ந்து, உறவினர்கள் அவரது உடலை எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |