Categories
Uncategorized

உலகிலேயே ஊரடங்கை இத்தனை ஓட்டை ஒடிசல்களோடு அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழகம்: ஸ்டாலின் காட்டம்!!

பலி எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் 5-வது இடத்தில் இருக்கிறது.சென்னையில் மட்டும் 279 பேர் பலியாகியுள்ளனர் என திமுக தலைவர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை அரசே அவர்களின் இருப்பிடம் தேடி வழங்கி, உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் ரூ.5,000 அரசு வழங்க வேண்டும். தங்களது தேவையை கவனித்து செய்வதற்கு அரசாங்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையை முதலில் மக்களிடம் ஏற்படுத்துங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவையை பூர்த்தி செய்ய தவறினால், தேவைக்காக மக்கள் வெளியில் வர வேண்டியதை அரசாங்கமே உருவாக்குவதாக ஆகி விடும். மேலும் தமிழ்நாட்டில் 5ம் கட்ட ஊரடங்கு காலம் முடிவடைய இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், கொரோனா நோய் தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதா? என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. உலகத்திலேயே ஊரடங்கை இத்தனை ஓட்டை ஒடிசல்களோடு, இவ்வளவு கேவலமாக அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழகம் தான் இருக்கும்.

முழு ஊரடங்கு, ஊரடங்கு, ஊரடங்குக்குள் ஊரடங்கு, தளர்வு ஊரடங்கு, தொலைவில் மேலும் தளர்வு என்று ஊரடங்கு சட்டத்தையே தரம் தாழ்த்தி தொடர்ந்து தமிழக அரசு கொச்சைப்படுத்தியது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஒரு மாநிலத்துக்கு இணையாக சென்னை நகரத்தின் ஒரு மண்டலத்தில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை இருக்கிறது என்றால் இறப்பு விகிதத்தை சொல்லி தனது நடவடிக்கையை நியாயப்படுத்த முயற்சி செய்யும் முதல்வருக்கு, மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறதா? இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சுகாதாரத்துறை சொல்லும் கணக்கும், சென்னை மாநகராட்சி சொல்லும் கணக்கும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கிறது, இரண்டுமே அரசின் துறைகள் தானே? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவிப்பது மட்டுமே அரசாங்கத்தின் கடமை அல்ல; அடுத்தடுத்து தேவையான மருத்துவக் கட்டமைப்பைத் திட்டமிட்டு கொரோனவை தடுப்பதே அரசாங்கத்தின் கடமை என்பதை உணருங்கள் என்று கூறியுள்ளார்.

டெண்டர்களை இறுதி செய்வதிலும், மத்திய பாஜக அரசை மகிழ்விப்பதிலும் செலவிடும் நேரத்தில் ஒரு சிறு பகுதியாவது, கொரோனவின் கோரப்பிடியில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு செலவிட கருணையுடன் முன்வாருங்கள்” என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |