ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களிடம் தாமத கட்டணம் வசூலிக்கப்படாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வரியை முழுமையாக செலுத்தி இருந்தால், கணக்கு தாக்கலில் தாமதமானாலும் அபராதம் இருக்காது என தெரிவித்துள்ளார். ஜீலை 2017 முதல் 2020 ஜனவரி வரை ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யாதோருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் கூறியுள்ளார். டெல்லியில் காணொலி காட்சி மூலம் நடந்த கவுன்சில் கூட்டத்தில் அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 40-வது கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சர், மத்திய அரசு உயரதிகாரிகள் அனைவரும் காணொலி மூலம் பங்கேற்றுள்ளனர்.
மேலும் இந்த கூட்டத்தில் வைரஸ் ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, மாநிலங்களுக்கு ஏற்பட்ட வரி வருவாய் இழப்பு ஆகியவை குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் குழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களுக்கு வரி வருவாய் குறைந்திருப்பதால் வருவாயை அதிகரிப்பதற்கான வழியாக புதிதாக செஸ் விதிப்பது குறித்தும் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் கணக்கு தாக்கல் செய்யாத நிறுவனங்களுக்கு தாமதத்திற்கான அபராதம் வசூலிக்கப்படாது என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.