Categories
அரசியல் மாநில செய்திகள்

ரோடு இல்லாமல் எப்படி போவீங்க ? 8 வழிச்சாலை குறித்து முதல்வர் பளிச் பதில்

8வழிச்சாலை திட்டம் என்பது மாநில அரசின் திட்டம் இல்லை மத்திய அரசின் திட்டம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

விவசாயிகளை பாதிக்கின்ற எந்த ஒரு திட்டமும் தமிழகத்தில் வராது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் எட்டு வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சரின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், சாலை இல்லாமல் எவ்வாறு பயணம் செய்வீர்கள்? இப்பொது இருக்கும் சாலைகள் எப்படி அமைக்கப்பட்டது? இப்போதிருக்கும் சாலையை நிலத்தை கையகப்படுத்தியே அமைத்துள்ளோம்.

250% போக்குவரத்து அதிகரித்துள்ளது:

ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்முடைய தேவைக்கு ஏற்ப நிலத்தை கையகப்படுத்தி தான் சாலை அமைக்கின்றோம். அன்றைய தினம் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்தபோது டி ஆர் பாலு அவர்கள் மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். சுமார் 796 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டது. அப்போதும் நிலம் கையகப்படுத்தியே சாலை அமைத்தார்கள். அன்றைய போக்குவரத்துக்கு தக்கவாறு நிலத்தை கையகப்படுத்தினார்கள். இன்றைக்கு போக்குவரத்து 250% அதிகரித்திருக்கிறது.

மத்திய அரசின் திட்டம்:

இவ்வாறு அதிகரித்திருக்கும் போது அதற்கு தேவையான சாலைகளை மத்திய அரசு செய்து கொடுப்பதற்காக தான் இந்த திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம். மாநில அரசின் திட்டம் அல்ல, அதற்கு நாம் உதவி மட்டுமே செய்கிறோம். சேலம் மாவட்டம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், கொச்சி வரை இந்த சாலை வழியாக செல்ல உள்ளனர். அதோடு நாமக்கல் மாவட்டம், கரூர், மதுரை, திருச்சி என செல்ல உள்ளனர். இது சேலத்திற்கு மட்டும் வருவது இல்லை. இந்த வழியாக பல தொழிற்சாலைகள் இருக்கும் மாவட்டங்களுக்கு செல்வார்கள்.

உட்கட்டமைப்பு வசதி:

எதிர்காலத்தில் தொழில்வளம் பெருக வேண்டும் என்று நாம் அத்தனை பேருமே நினைக்கின்றோம். அப்படி தொழில் வளம் பெருகினால் தான் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அப்படி தொழில்வளம் பெருக வேண்டும் என்று சொன்னால் உட்கட்டமைப்பு வசதி மிக மிக முக்கியம். உட்கட்டமைப்பு வசதி இல்லை என்றால் யாரும் தொழிற்சாலை தொடங்க மாட்டார்கள். இப்போது நிதியமைச்சராக இருக்கும்  மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள் கடந்த காலத்திலே ராணுவத் துறை அமைச்சராக இருந்தார் . அவர்கள் இருக்கும்போது குறிப்பிட்டது நம்முடைய தமிழகத்திற்கு ராணுவ உதிரி பாகங்கள் தயாரிப்பதற்காக தொழிற்சாலைகள் சேலத்திலும் வரும் என சொல்லி இருக்கிறார்.

cm palaniswamy about chennai - salem highway project ...

சாலை விரிவாக்கம் தேவை:

இப்படி பெரிய பெரிய தொழிற்சாலைகள் வருகின்றபோது உட்கட்டமைப்பு மிக மிக முக்கியம். அது மட்டுமல்ல இப்போதும் சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு கொண்டிருக்கிறது. அந்த விபத்தை குறைப்பதற்கும் சாலைகள் விரிவாக்கம் தேவை. அதேபோல இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் எரிபொருளை மிச்சப்படுத்த வேண்டும், பயண நேரத்தை குறைக்க வேண்டும், விபத்தை குறைக்க வேண்டும், சுற்றுசூழல், மாசுபாட்டையும் பார்க்கவேண்டும். அனைத்தையும் கருத்தில் கொண்டே இத்திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |