நாளை முதல் நடமாடும் ஆம்புலன்ஸ் மூலமாக கொரோனா சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், சென்னையில் அதனுடைய தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனுடைய தாக்கத்தைக் குறைப்பதற்காக தமிழக அரசும், சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பட்சத்திலும், பாதிப்பு குறைந்தபாடில்லை. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பிலிருந்து கண்டறிய பட்டவர்கள்தான்.
இந்நிலையில் கொரோனா நோயை விரைவில் கட்டுப்படுத்தி கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக நாளை முதல் சென்னையில் 15 மண்டலங்களில் 173 நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ராயபுரம் மண்டலத்தில், வீடு வீடாக ஒருபுறம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில், இந்த நடவடிக்கை விரைவில் குற்றவாளிகளை கண்டறிந்து தனிமைப்படுத்தி அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. தமிழக அரசின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.