மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை கடந்துள்ள நிலையில் 8,718 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 817 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 398 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழகமும், டெல்லியும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மகாராஷ்டிராவில் மட்டும் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 493 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அங்கு மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் ஆயிரத்து 718 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் மொத்தமாக 47 ஆயிரத்து 796 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். இதனால் 49 ஆயிரத்து 628 பேர் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 127 பேர் மரணம் அடைந்ததால் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 717 ஆக உள்ளது.தமிழகத்தில் 40 ஆயிரத்து 698 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, 367 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.