தமிழ்நாடு அரசு மதுபானங்களை ஆன்லைனில் விற்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலினால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுபான கடைகளை திறக்க அரசு முடிவு செய்து இது குறித்த தகவலை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து அரசின் அறிவிப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சில நிபந்தனைகளுடன் மதுபான கடைகளை திறப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் நீதிமன்றம் அளித்த நிபந்தனைகளை அரசு செயல்படுத்த தவறியதால் ஊரடங்கு முடியும்வரை மதுபான கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டது. அதோடு ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட இந்த வழக்கில் நாடு முழுவதிலும் மதுபான கடைகள் திறக்கப்பட்டு விட்டதால் தற்போது இது குறித்து ஆராய வேண்டிய அவசியமில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்ததோடு தமிழ்நாடு அரசு ஆன்லைன் மூலமாக மதுபானங்களை விற்பனை செய்ய ஆலோசிக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.