திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
கொரோனா அச்சத்தின் காரணமாக கடந்த மார்ச் 19-ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டது. இந்நிலையில் ஜூன் 8ஆம் தேதி முதல் வழிபாட்டு தளங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து 80 நாட்களுக்கு பிறகு மூடப்பட்ட திருப்பதி கோவில் திங்கள் கிழமை அன்று திறக்கப்பட்டது. முதல் மூன்று நாட்களுக்கு உள்ளூர் மக்களும் தேவஸ்தான ஊழியர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருப்பதியில் இருக்கும் கோவிந்தராஜ சாமி கோயிலில் பணியாற்றிவந்த தேவஸ்தான ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த கோவிலின் நடை மூடப்பட்டது. அதோடு அவர் சென்று வந்த இடங்கள் முழுவதிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இன்றும் நாளையும் கோவில் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றினால் பாதிக்கப்பட்ட தேவஸ்தான ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் உரிய பரிசோதனை மேற்கொள்ள ஆந்திர சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவில் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் கோவிலை ஞாயிற்றுக்கிழமை திறக்கலாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.