Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பேருந்து வந்ததும்…. காற்றில் பறந்த சமூக இடைவெளி….. திண்டுக்கல்லில் கொரோனா பரவும் அபாயம்…!!

திண்டுக்கல்லில் பேருந்தில் சின்ன இடைவெளி கூட இல்லாமல் அலைமோதிய மக்கள் கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே தமிழகத்தில், திண்டுக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சீராகக் குறைந்து எப்போதாவது ஓரிரு பாதிப்புகள் மட்டுமே தென்பட்டு வருகின்றன. பல மாவட்டங்கள் பச்சை மண்டலங்களுக்கும் மாற்றப்பட்டு விட்டன. இந்நிலையில் ஊரடங்கு ஐந்தாவது கட்ட நிலையில் தொடரும் இச்சமயத்தில், பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவது, வணிக வளாகங்கள், கோவில் வளாகங்கள் உள்ளிட்டவற்றை திறப்பது என பல்வேறு உத்தரவுகளை மத்திய அரசு அறிவித்தது. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பாதிப்பு குறைவாக உள்ள மண்டலங்களில் பேருந்து சேவையானது நேற்றுமுதல் இயக்கப்பட்டு உள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் நேற்று முன்தினம் முதல் இயக்கப்பட்டன.இதனை தொடர்ந்து அரசு பேருந்துகளும் இன்று இயக்கப்பட, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் வெளியூருக்கு செல்லும் மக்கள் கூட்டம் திரளாக அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் கூட்டத்திற்கு ஏற்றார்போல் தனியார் பேருந்துகளும் அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக வருகின்ற பேருந்தை விட்டு விடக்கூடாது என்று கொரோனா இருப்பதையும் மறந்து, சமூக இடைவெளியை காற்றில் பறக்க விடுவது போல் முண்டியடித்துக்கொண்டு மக்கள் பேருந்தில் ஏறினர். சமூக இடைவெளி என்பது கொஞ்சம் கூட பின்பற்றப்படாததால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால், இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

 

Categories

Tech |