மதுரையில் ஒரே மாதத்தில் குழந்தை பிறப்பு எண்ணிக்கை 1,413 என பதிவாகியுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 5வது கட்ட நிலையில் அமலில் உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டு அரசு மருத்துவமனைகளும், அரசு அனுமதி அளித்த தனியார் மருத்துவமனைகளும் மட்டுமே செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், மதுரை அரசு மருத்துவமனை தமிழகத்திலேயே மிகப் பெரிய அளவிலான மருத்துவமனைகளில் ஒன்று.
இங்கு மதுரை மட்டுமல்லாமல் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு சாதாரண காலங்களிலேயே அதிக அளவு பிரசவம் நடைபெறும். தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்திலும், கடந்த மே மாதத்தில் மட்டும் 1,413 பிரசவங்கள் நடத்தப்பட்டு குழந்தைகள் அனைத்தும் ஆரோக்கியமாக பிறந்துள்ளன. இதில் 903 பிரசவம் சுக பிரசவம் ஆகும்.
510 பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலம் நடைபெற்றிருக்கிறது. இதைத் தவிர 28 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்களில் 14 பேருக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. இதில் பிறந்த குழந்தை ஒன்றுக்கு கூட கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இதுவே மருத்துவமனையின் சிறப்பாக கருதப்படுகிறது.கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்படும் மதுரை அரசு மருத்துவமனைக்கு மத்திய அரசு சார்பில் பாராட்டு சான்றிதழும் கிடைத்துள்ளது.