ஒரு வாகன விபத்தில் மட்டும் உயிர் காக்கும் சிகிச்சைக்காக 50 முதல் 100 யூனிட் வரை ரத்தம் தேவைப் படலாம். நமது நாட்டில் ஒவ்வொரு 2 வினாடியிலும் யாராவது ஒருவருக்கு சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்படுகிறது. ரத்தத்தை வேறு வகையில் உற்பத்தி செய்ய முடியாததால் மனிதநேயமிக்க மற்றவர்களிடம் இருந்து தானமாக பெற முடியும்.
இந்தியாவில் 60 சதவீதம் பேர்க்கு ரத்ததானம் செய்ய தகுதி இருந்தாலும் சுமார் 5% பேர் மட்டுமே ரத்த தானம் செய்ய முன்வருகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததுதான். 18 முதல் 60 வயது வரை உள்ள அனைவருமே ரத்ததானம் செய்யலாம். 45 கிலோ எடைக்கு மேல் உள்ளவர்களும் 12.5 கிராம் ஹீமோகுளோபின் அளவு உள்ளவர்களும் மற்றும் தொற்று வியாதி இல்லாதவர்களும் தாராளமா மனமுவந்து ரத்ததானம் செய்யலாம்.
ரத்தக்கசிவு சம்பந்தமான வியாதி உள்ளவர்களும், இதயம், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் தைராய்டு சம்பந்தமான வியாதி உள்ளவர்களும், வலிப்பு மற்றும் மனரீதியான வியாதி உள்ளவர்களும், காசநோய் மற்றும் தொழு நோய் உள்ளவர்களும், ஆஸ்துமா மற்றும் புற்று நோய் உள்ளவர்களும்,கட்டுப் படுத்தப்படாத ரத்த அழுத்த நோய் உள்ளவர்களும், இன்சுலின் எடுக்கும் சர்க்கரை வியாதி உள்ளவர்களும்,போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையானவர்களும் எப்போதுமே ரத்ததானம் செய்ய இயலாதது.
சமீபத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும், 24 மணி நேரத்திற்குள் மது அருந்தியவர்களும், 6 மாதத்திற்குள் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும், பால் கொடுக்கும் தாய்மார்களும், கர்ப்பமுற்ற தாய்மார்களும் தற்காலிகமா ரத்ததானம் செய்ய இயலாது. ரத்ததானம் செய்ய அருகில் உள்ள ரத்த வங்கியை அணுகவும். ரத்த தானம் செய்த பின் சுமார் 60 நிமிடங்களில் நமது வேலையை தொடங்கலாம். உயிர்காக்கும் ரத்த தானத்தை மனமுவந்து மனித நேயத்துடன் மூன்று மாதத்திற்கு ஒரு முறை செய்யலாம்.