அதிபருடன் நடந்து சென்றதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார் பென்டகன் முதன்மை தளபதி ஜெனரல் மார்க் ஏ.மில்லே.!
வாஷிங்டன்: லாஃபாயெட் சதுக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட இதர முக்கியஸ்தர்களுடன் தான் நடந்து சென்றதற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார் பென்டகனின் முதன்மை தளபதி ஜெனரல் மார்க் ஏ.மில்லே.
அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் சில போலீசாரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கங்கள் நடைபெற்றுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வெள்ளை மாளிகை அருகே லாஃபாயெட் சதுக்கத்தில் அமைதி வழியில் நடைபெற்ற போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய பிறகு, லாஃபாயெட் சதுக்கத்தில் அமைந்திருந்த, போராட்டத்தால் சேதமடைந்த ஒரு தேவாலயத்தைப் பார்வையிட, அமெரிக்க அதிபர், பாதுகாப்புத் துறை செயலர் மார்க் டி.எஸ்பர் மற்றும் இதர மூத்த ஆலோசகர்கள் நடந்து சென்றனர். அப்போது, ஜெனரல் மார்க் ஏ.மில்லேவும் அதிபர் உடன் நடந்துசென்றார்.
ஆனால், பென்டகன் தளபதியின் அந்த செயல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. உள்ளூர் அரசியல் நடவடிக்கையில் ராணுவம் தலையிடுவதா? என கேள்விகளை எழுப்பி.. பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், நான் அந்த இடத்தில் அதிபருடன் சென்றிருக்கக்கூடாது என ஜெனரல் மில்லே தனது செயலுக்கு மன்னிப்புக் கோரியுள்ளார், மேலும் தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்பட நான் காரணமாகிவிட்டேன் என்றும், இது எனக்கு ஒரு நல்ல பாடம் எனவும் கூறினார்.