கொரோனா தடுப்பில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஒரு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
ஜூன் 12 அன்று எண்ணிக்கை 40,000ஐ கடந்துள்ளது. சென்னையில் மட்டுமே 28 000க்கும் அதிகமான நோய்த் தொற்றாளர்கள். ‘அதிகாரப்பூர்வ’ இறப்பின் எண்ணிக்கை 367. நோய்த் தொற்றுக் காலத்தில் அ.தி.மு.க அரசின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளும், பின்னால் இருக்கும் அரசியல் சுயநலக் காரணங்களும் மக்களுக்கு அதிர்ச்சியையும் அயற்சியையும் ஏற்படுத்துகிறது. சுகாதாரத்துறைச் செயலாளர் பதவியிலிருந்து திருமதி பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். மாற்றப்பட்டு, திரு ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மறைக்கப்படும் மரணங்கள் -குளறுபடிகள் -பின்னணி காரணங்கள்:
சென்னையில் மட்டும் மறைக்கப்பட்டிருக்கும் 400க்கும் அதிகமான மரணங்கள் குறித்து சிறப்புக்குழு ஆய்வை மேற்கொள்ளும் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து தான் சுகாதாரத்துறைச் செயலாளர் மாற்றத்திற்கான அறிவிப்பும் வெளியானது. ‘கோவிட்-19 பாசிட்டிவ்’ நோயாளிகள் இறந்திட நேரும்போது, ‘நெகட்டிவ்’ எனக் குறிப்பிடப்படுவது, தலைமைச் செவிலியர் திருமதி, ஜோன் மேரி பிரிசில்லாவின் ‘கேஸ் ஷீட்டில்’ ‘பாசிட்டிவ்’ என்றிருந்த நிலையில், இறப்பு அறிக்கையில் ‘நெகட்டிவ்” என மாற்றப்பட்டது குறித்த கேள்விகளுக்கு இன்னமும் பதில் இல்லை.
‘வீட்டில் ஒருவருக்கு கொரோனா என்றாலும் குடும்பத்தினர் அனைவரும் முகாமுக்கு அனுப்பப்படுவார்கள்’, ‘பரிசோதனை செய்தாலே 14 நாள் தனிமை’ என்றெல்லாம் மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் பொதுமக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கினால் சிறப்பு அதிகாரியான ராதாகிருஷ்ணன் விளக்கம் என்ற பெயரில் மேலும் குழப்புகிறார்.சென்னையில் 20,000 படுக்கைகள் உள்ளன என சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்த பிறகு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் 17,000 படுக்கைகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
யார் சூப்பர் முதல்வர்?
ஒவ்வொரு அறிவிப்பிலும் முரண்பாடுகள் ஏன்? முடிவுகளை யார் எடுக்கிறார்கள்? அமைச்சர்-அதிகாரிகளிடையே போட்டியினால் இந்தக் குழப்பங்களா? எடப்பாடி பழனிசாமியை விஞ்சிய “சூப்பர்” முதல்வர்களின் கைகளில் நிர்வாகம் இருக்கிறதா? குழுக்களாக, வெவ்வேறு திசை நோக்கிச் செயல்படும் அரசியல்-அதிகாரப் போட்டிக்கும், ஊழல்களுக்கும் அப்பாவி மக்களின் உயிரை கொரோனாவுக்கு பலிகடா ஆக்குவதா?
‘தலைசிறந்த மருத்துவர்’ எடப்பாடி:
மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் கொரோனா ஒழிந்தவிடும் என முதலமைச்சர் தன்னை ஒரு தலை சிறந்த டாக்டராகப் பாவித்து, அறிவித்து ஒரு மாதகாலத்திற்கு மேலான நிலையில், பரவல் தொடர்ந்து அதிகரிக்கின்றது. ஜூலை மாதத்தில் நோய்த்தொற்று பரவல் கடுமையாக இருக்கும் என அரசுத் தலைமை வழக்கறிஞர் அரசின் சார்பில் தெரிவிக்கிறார். முதலமைச்சரோ ஊடகத்தினரிடம் ஏகடியம் பேசி அவரே மாஸ்க் அணியாமல், இடைவெளியின்றி விழாக்களில் பங்கேற்கிறார்.
சுகாதாரத் துறைச் செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும்!
இக்கட்டான கட்டத்தில் பேரிடர் தணிப்புப் பணிகளில், இனியேனும் முறையான ஒருங்கிணைப்பை உறுதி செய்திட சுகாதாரத் துறையை @CMOTamilNadu தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும்! pic.twitter.com/ds1aH5afzR
— M.K.Stalin (@mkstalin) June 13, 2020
எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் கொரோனா பரவல் குறித்த ஆய்வு முடிவுகளை அரசுக்கு வழங்கியிருக்கிறது. மக்களை பாதுகாத்திட வேண்டிய அரசு, வீண்தம்பட்டம் அடித்துக் காலம் கழிக்கிறது. நிலைமை கை மீறிப் போய்க் கொண்டிருக்கிற பேரிடர் சூழலில் இனியேனும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு எத்தனை நோயாளிகள்- பரிசோதனைகள்-மரணங்கள் என்பதை மறைக்காமல் வெளியிடவேண்டும்.
துறைச் செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் துறை அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்ப்பார்பு! இக்கட்டான கட்டத்தில் பேரிடர் தணிப்புப் பணிகளில், அடிப்படை ஒருங்கிணைப்பு இல்லாமல் போனதே குளறுபடிகளுக்கு காரணம் என்று நிபுணர்கள் கணித்துள்ளார்கள். முறையான ஒருங்கிணைப்பை உறுதி செய்திட சுகாதாரத் துறையை முதலமைச்சர் தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.