சீனாவில் மீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட்டதால் பெய்ஜிங்கில் இருக்கும் உலக அளவில் பெரிய சந்தையான ஷின்பாடி மூடப்பட்டது
உலக நாடுகளிடையே தற்போது ஏராளமான உயிர் பலியையும் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தி வரும் கொரோனா முதன்முதலில் தோன்றியது சீனாவில் தான். ஆனால் அங்கு எடுத்த தீவிர நடவடிக்கைகளால் தொற்றின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக முழுவதுமாக பாதிப்பு குறைந்ததாக அந்நாட்டின் அரசுபெய்ஜிங் தெரிவித்திருந்தது. இந்நிலையில் 50 நாட்களுக்கு பிறகு சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் 7 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வியாழனன்று ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து மறுநாளே மேலும் 6 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் பெய்ஜிங் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் ஷின்பாடி மொத்த சந்தையில் அவர்கள் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து 4000 விற்பனையாளர்களை கொண்ட உலக அளவில் மிகப்பெரிய மொத்த உணவு விற்பனை சந்தையான ஷின்பாடி மூடப்பட்டது.
அதோடு அங்கு பணிபுரிந்து வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அரசு தெரிவித்தது. இந்நிலையில் ஷின்பாடி சந்தைக்கு அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அப்பகுதிக்கும் சீல் வைக்கப்பட்டது. நாட்டில் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு அதைத்தொடர்ந்து திங்கள் முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் மீண்டும் தொற்றின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.