வங்காள தேசத்தின் முன்னாள் சுகாதாரத்துறை மந்திரியான முகமது நசீம் கொரோனாவுக்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்காள தேசத்தை சேர்ந்தவர் முகமது நசீம். முன்னாள் சுகாதாரத்துறை மந்திரியான இவர் ஆளும் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். கடந்த 2ஆம் தேதி 72 வயதான முகமது நசீம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தலைநகர் டாக்காவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமானது தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. எனவே அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
அதன்படி அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பின்னர் உடல்நிலை தேறி வருவதாக கூறி மருத்துவர்கள் அவரை சாதாரண வார்டுக்கு மாற்றினர். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென நசீமின் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு வங்காள தேச அதிபர் அப்துல் ஹமீத், வெளியுறவு மந்திரி அப்துல் மோமன், பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்