முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை பகல் 12 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த கூட்டமானது நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அரசு எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் வெளிமாநில நிறுவனங்களை ஈர்ப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 23,409 ஆக உள்ள நிலையில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 397 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த அமைச்சரவை கூட்டமானது நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து வரும் 15ம் தேதி காலை 11 மணிக்கு மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.