டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா பாதிப்பு டெல்லியில் தான் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1200 பேர் இறந்துள்ளனர்.
மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள தலைநகர் டெல்லியில் கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில், அதை தடுப்பது குறித்து இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தநிலையில், டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களில் கொரோனா பரிசோதனை இரண்டு மடங்கு அதிகரிக்கப்படும். அடுத்த ஆறு நாட்களில் இது மூன்று மடங்காக அதிகரிக்கப்படும். டெல்லியில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 500 ரயில் பெட்டிகள் வழங்கப்படும்.மேலும் தனியார் மருத்துவமனைகளில் 60% படுக்கைகள் குறைந்த விலையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் என அமித்ஷா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.