தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்த மருத்துவர் மணிமாறன் மற்றும் அவரது மனைவி சுதா ஆகிய 2 பேரையும் தாக்கி விட்டு, 11 1/4 சவரன் நகை மற்றும் 1.25 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது..
மாவட்ட குற்ற ஆவணப்பிரிவு (DCRB) ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீசார் மானோஜிப்பட்டி பகுதியில் மணி மற்றும் சதீஷ் குமார் ஆகிய 2 வழிப்பறி கொள்ளையர்களைப் பிடிக்க முயன்ற போது, சதீஷ் குமார் தப்பி ஓடி விட்டான்.. மணி மட்டும் போலீசாரிடம் சிக்கி விட்டான்.
பின்னர் வழிப்பறி கொள்ளையன் மணியை போலீசார் வாகனத்தில் ஏற்றியபோது, தன்னுடைய இடுப்பில் மறைத்து வைத்திருந்த சிறிய அரிவாளை எடுத்து கௌதம் என்ற 28 வயதுடைய போலீசாரின் தொடையில் வெட்டிவிட்டு, மணியும் தப்பிச் சென்றுவிட்டான்.
இதையடுத்து காயமடைந்த போலீசார்கௌதம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தப்பியோடிய குற்றவாளிகள் 2 பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்தநிலையில் வழிப்பறி கொள்ளையன் மணி ரெட்டிப்பாளையம் காட்டுவாரியில் ஒரு புங்கை மரத்தில் தன்னுடைய கைலியால் தூக்கிட்டவாறு இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.