கோவை மாவட்டத்தில் கொரோனா அறிகுறியுடன் இருந்த 28 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ஆர்.ஜி.புதூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இவருக்கு கடந்த வாரம் சளி, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் இளைஞர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மூன்று நாள் தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் நேற்றைய தினம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது. அங்கு அவருக்கு கொரோனா அறிகுறி சளி,காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலும் இருந்துள்ளது.
அதனால் இவரை தனிமைப்படுத்தப்படுத்தி சிகிச்சை அளித்தார்கள். அவருக்கு முதல் பரிசோதனை மேற்கொண்ட போது எந்தவித அறிகுறியும் இல்லை என தெரியவந்தது. இருப்பினும் மிகக் கடுமையான சுவாச தொற்று ஏற்பட்டதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டாவது பரிசோதனை என்பது 24 மணி நேரத்திற்கு பிறகுதான் எடுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு பிறகு தான் இவருக்கு தொற்று உள்ளதா என்பது குறித்து தெரியவரும் என டீன் காளிதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் சென்னையிலிருந்து எப்போது வந்தார் ? இவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் ? என்பது குறித்தும் தற்போது சுகாதாரத்துறை விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.