திமுக தலைவர் முக.ஸ்டாலின் இணையம் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
திமுக தலைவர் முக.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து காணொளி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு பணியில் உள்ள பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், தமிழக அரசை நோக்கி 5 கேள்விகளை முன்வைத்தார். தொடர்ந்து ஸ்டாலின் பேசும் போது, இறுதியாக இந்த அரசுக்கு உங்கள் மூலமாக சொல்ல விரும்புவது, கொரோணா பேரிடர் காலத்தில் நடக்கும் அனைத்து முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் குழப்பங்களுக்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
மருத்துவ கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி, விரிவாக்கம் செய்ய வேண்டும். பரிசோதனைகளை பரவலாக்கி அதிகப்படுத்தவேண்டும். வரும் அக்டோபர் நவம்பரில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும் என்று ஐ சி எம் ஆர் கொடுக்கும் எச்சரிக்கையை தீவிர கவனத்தில் கொள்ளவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை அக்கரையுடன் கவனிக்க வேண்டும். முன்கள வீரர்களுக்கு தக்க ஊக்குவிப்பும், பாதுகாப்பும் உறுதி செய்ய வேண்டும். கொரோனாவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான நிதி உதவி அளிக்க வேண்டும். இந்தப் பேரிடர் காலத்தில் அமைச்சர் களுக்குள் நடக்கக்கூடிய குழு மனப்பான்மை அடிப்படையான தன்முனைப்பு சண்டை முடிவுக்கு வரவேண்டும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும். அதோடு கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆராய அமைக்கப்பட்ட குழு அறிக்கையை எந்தவித ஒளிவு மறைவுமின்றி, கூட்டல் கழித்தல் இல்லாமல், அப்படியே அடுத்த இரண்டு நாட்களுக்குள் மக்கள் மன்றத்தின் முன் தமிழக அரசு வைத்தாக வேண்டும். இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படவில்லை என்று சொன்னால் திராவிட முன்னேற்றக் கழகம் நீதிமன்றத்தை நாடும் என எச்சரிக்கை செய்து என்னுடைய விளக்கத்தை நிறைவு செய்து கொள்கிறேன் என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார்.