டாஸ்மாக் கடைகளை திறக்க அவசரம் அவசரமாக தமிழக அரசு முடிவெடுத்தது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, கோயம்பேடு சந்தை விவகாரத்தில் அலட்சியமாக நடந்து கொண்டதால் நோய் தொற்று அதிகரித்தது என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்கும் நேரத்தில் ஜூன் 1ம் தேதி பொதுத்தேர்வுகளை நடத்த முடிவெடுத்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து ஜூன் 15ம் தேதி பொதுத்தேர்வு நடத்தப்படும் என மீண்டும் அறிவித்தனர். ஆனால் எதிர்க்கட்சிகள் அழுத்தத்தாலும், உயர்நீதிமன்ற அறிவுரையாலும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், அரசின் அலட்சியம் காரணமாவே கொரோனா பரவல் அதிகரித்து விட்டதாக குற்றம் சாட்டினார். கொரோனா மரணங்கள் பற்றிய தகவலை வெளியிட தாமதம் ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா மரணங்களை தமிழக அரசு குறைத்துக் காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். கொரோனவால் 236 பேரின் மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
உயிரிழப்பை மறைக்கும் முயற்சிகள், கொரோனா பேரிடரை பொறுப்பற்ற முறையில் அரசு கையாள்வதையே காட்டுகிறது எனக் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு விவரங்களை தெரிவிக்கும் போது ஏப்ரலில் 16 வகையான தகவல்களை தெரிவித்தனர். அதன் பிறகு முக்கியமான விவரங்களை மறைத்து 10 வகையான தகவல்களை மட்டுமே தந்தனர். மக்கள் நலனே முக்கியம் என எதிர்க்கட்சியான திமுக செயல்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.