தமிழகத்தில் 3 மாதத்துக்குப் பிறகு 2வது கட்ட கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர் குழுவினர் தகவல் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மருத்துவ நிபுணர் குழுவினர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது என கூறியுள்ளனர். புதிதாக 12,000 மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும்,
தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்காக 75,000 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தீவிர நோயாளிகளுக்காக 5000 படுக்கைகள் தயாராக உள்ளன என்றும் கூறியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை கட்டுப்படுத்த அரசுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது என மருத்துவ நிபுணர் குழுவினர் தகவல் அளித்துள்ளனர்.
3 மாதத்துக்குப் பிறகு 2-வது கட்ட கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை கூறிய அவர்கள், முகக்கவசம் அணிவது, சமூகவிலகலை கடைபிடிப்பது என்று அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஓரிரு நாள் காய்ச்சல் அறிகுறி இருந்தால்கூட மருத்துவமனைக்கு வரவேண்டும், சுவாசப் பிரச்சனை வந்த உடனே மருத்துவமனைக்கு வரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நோய் அதிகம் பாதித்த இடங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல் அளித்துள்ளனர்.