காதலன் இறந்ததால் வேதனையில் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகேயுள்ள கம்மங்காட்டுகளம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் கேசவன்.. 28 வயதுடைய இவர் கோவையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். அதேபோல் ஊஞ்சலூர் அருகிலுள்ள நடுப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் கிருத்திகா பி.ஏ. முடித்துள்ளார். 25 வயதுடைய இவர் கேசவன் வேலை செய்த அதே தனியார் மருத்துவமனையின் ஈரோடு கிளையில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.
கேசவன் – கிருத்திகா இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தான் தன்னை கல்யாணம் செய்யும்படி கேசவனிடம் கிருத்திகா கூறியுள்ளார். இதற்கு கேசவன் தனது வீட்டில் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கமாட்டார்கள். எனவே நாம் திருமணம் செய்துவிட்டு பின்னர் எங்களுடைய வீட்டில் சொல்லிவிடலாம் என கூறியுள்ளார். அதேசமயம் கிருத்திகாவின் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்..
இதனைத்தொடர்ந்து கிருத்திகாவின் பெற்றோர் சம்மதத்துடன் கிளாம்பாடியிலுள்ள ஒரு கோவிலில் கடந்த 3ஆம் தேதியன்று அவர்கள் திருமணம் செய்து கொள்ளவதற்கு முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றன. ஆனால் திருமணநாளில் கேசவன் அங்கு வரவில்லை.. இதனால் திருமணம் நின்று போக, கிருத்திகா ஏமாற்றமடைந்தார்.
இதனிடையே நேற்று முன்தினம் கோவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் காதலன் கேசவன். இதனை அறிந்த கிருத்திகா மிகவும் மனமுடைந்து போனார். இதனால் கிருத்திகாவின் பெற்றோர் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.. ஆனாலும் அவரால் காதலன் மறைவை தாங்கி கொள்ள முடியவில்லை..
பின்னர் கிருத்திகாவின் பெற்றோர் வீட்டை வீட்டு வெளியே சென்ற பிறகு துயரத்திலிருந்த கிருத்திகா இனி வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்து, வீட்டில் யாரும் இல்லாததால் உடைந்த கண்ணாடியை எடுத்து தன்னுடைய கையை அறுத்து கொண்டார். அதனைத்தொடர்ந்து சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய தகவலறிந்ததும் மலையம்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிருத்திகாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. காதலன் இறந்ததால் மன வேதனையில் காதலியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் ஊஞ்சலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.