தமிழகத்தில் முக கவசம் அணியாமல் வெளியே சென்ற 73 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து காவல்துறையினர் மூலமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தேவையில்லாமல் வெளியே செல்பவர்கள் மீதும், வெளியே சென்றால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மதிக்காமல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது சென்னை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அபராதம் விதித்து வருகிறார்கள்.
கடந்த மாதம் 22 ஆம் தேதியிலிருந்து அபராதம் விதிக்கக் கூடிய நடவடிக்கையை சென்னை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வந்த நிலையில், முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தவர்கள் 73 ஆயிரம் பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளார். அவர்களிடம் இருந்து 3 கோடியே 65 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.