மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 178 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் உயர்ந்து கொண்டிருக்க, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையும் அதற்கு இணையாக இருந்து வருவது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்தமாக 3,38,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 9,697 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,73,707 குணமடைந்து வீடு திரும்பியதால் 1,55,404 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டிலேயே அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலம் என்ற வரிசையில் மகராஷ்டிரா முதலிடம் பெற்றுள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 2,786 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,10,744ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 178 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 4,128ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 56,049 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.