பிரிந்து சென்ற தன்னுடைய மனைவியுடன் வாழ்ந்து வந்த வாலிபரை, கணவர் நண்பர்கள் உதவியுடன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள கேசவபுரத்தில் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் என்ற வாலிபர் சபரிதா என்ற பெண்ணுடன் தனியாக வசித்து வந்துள்ளார். முன்னதாக சபரிதாவுக்கும், அவருடைய கணவர் பசுபதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.. இதன் காரணமாக, கணவர் பசுபதியை விட்டு பிரிந்து சென்று கணேஷ்குமாருடன் தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார் சபரிதா.. இதனால் பசுபதிக்கும், கணேஷ்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில், கொரோனா ஊரடங்கை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, கணேஷ் குமார் வீட்டில் இருக்கும் சமயம் பார்த்து பசுபதி தன்னுடைய நண்பர்களை அழைத்து கொண்டு வந்துள்ளார்.. கணேஷ்குமாரை கொலை செய்யும் திட்டத்தோடு வீட்டுக்குள் நுழைந்த பசுபதி, பட்டப் பகலில் சபரிதா கண்முன்னே கணேஷ்குமாரை நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளார்..
இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த கணேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.. இதனிடையே, கொலையை பார்த்த சபரிதா அலறியுள்ளார்.. இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் பசுபதி தன்னுடைய நண்பர்களுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்..
இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் போலீசார் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் சபரிதாவை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், கொலை செய்த பசுபதி மற்றும் அவரது நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.. (வெள்ளை சட்டை அணிந்து செல்பி எடுப்பவர் தான் பசுபதி)..