வேலூர் சி.எம்சி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இருந்து ஆம்பூர் சென்ற 65 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். அதேபோல, திருவண்ணாமலையை சேர்ந்த ஆண் ஒருவரும் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனிடையே,சென்னையில் கொரோனாவுக்கு இன்று 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞர் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 பேர், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர், சூளைமேட்டை சேர்ந்த 72 வயது மற்றும் 62 வயது முதியவர்கள், ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 67 வயது மூதாட்டி என மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது போல், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் உயிரிழந்தவர்களில் 12 பேர் தனியார் மற்றும் 32 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். இந்த நிலையில் இன்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.