கல்லணைக்கு குறித்த நேரத்தில் காவிரி தண்ணீர் வராததால் நீர் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது நேற்று பிற்பகல் திருச்சி மாவட்டம் முக்கொம்பை வந்தடைந்துள்ளது.
முன்னதாக ஜூன் 16ம் தேதி பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என அறிவித்திருந்தனர். இந்த நிலையில் கல்லணைக்கு குறித்த நேரத்தில் காவிரி தண்ணீர் வராததால் நீர் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு தண்ணீர் திறப்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மதியம் 1 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில் மாயனூர் தடுப்பணைக்கு விநாடிக்கு 8,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து சேருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,002 கன அடியில் இருந்து 2,210 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 99.64 அடியாக குறைந்துள்ளது. 308 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிந்தது. அணையின் நீர் இருப்பு 64.3 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்வரத்து – 2,210 கனஅடியாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக உள்ளது.