சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 33,244ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று வரை கொரோனோவால் 382 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 404ஆக உயர்ந்துள்ளது. ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களில் கொரோனா பாதிப்பானது அதிகரித்துள்ளது.
நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னை வாசிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பால் சென்னையை காலி செய்து விட்டு மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கு சரக்கு வாகனத்தில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து செல்பவர்களை செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டு வருகின்றனர்.
இ-பாஸ் மற்றும் உரிய உரிய ஆவணங்கள் இல்லாமல் இல்லாமல் செங்கல்பட்டு மாவட்ட எல்லை கடந்து செல்ல போலீஸ் தடை விதித்துள்ளனர். மேலும் இதுவரை 24 ஆயிரத்து 730 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்பி வருவதால் மேலும் கொரோனா வைரஸ் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.