21ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் சாராரி வெப்பநிலை 4.4 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பருவநிலை மாறுபாடு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புனேவில் செயல்பட்டு வரும் இந்திய வெப்பமண்டல வானிலை அறிவியல் நிறுவனத்தின் ஒரு பிரிவான பருவநிலை மாறுபாடு ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவின் சாரசரி வெப்பநிலை 1901 முதல் 2018 வரை 0.7 டிகிரி செல்ஸியஸ் உயர்ந்ததாகவும், இதற்கு பசுமை இல்ல வாயுக்கள் ஏற்படுத்திய விளைவே காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1986 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான 30 ஆண்டு கால கட்டத்தில், ஆண்டின் மிகவும் வெப்பமான பகல் நேர வெப்பநிலையானது 0.63 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்து காணப்பட்டது. ஆண்டின் மிகவும் குளிரான இரவின் தட்பவெப்பநிலையானது 0.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்து காணப்பட்டது. அதேபோல, இந்த நூற்றாண்டின் இறுதியில் ஆண்டின் பகல் நேர வெப்பமானது 4.7 டிகிரி செல்சியஸ் அளவுக்கும், ஆண்டின் மிகவும் குளிரான இரவின் தட்பவெப்பநிலையானது 5.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 21ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் சராசரி வெப்பநிலையில் 4.4 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு உயர வாய்ப்பிருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதியில் ஏப்ரல் முதல் ஜூன் மாத இடையேயானா கோடை காலங்களில் வெப்ப அலைகளின் தாக்கம் 3 முதல் 4 மடங்கு அளவு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.