தமிழக மக்கள் நல்வாழ்வு துறையின் நிர்வாக தோல்விக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார்.
தனது துறைச் செயலாளருக்கு சரிவர வழிகாட்ட முடியாதவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என விமர்சனம் செய்துள்ளார். ஜனவரி 7- லேயே மத்திய சுகாதார அமைச்சர் கடிதம் எழுதியும் மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாதவர் எனக் கூறியுள்ளார். மேலும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என சுட்டிக்காட்டினார்.
கொரோனவால் ஏற்பட்ட 236 மரணங்களை வெளியிடாமல் மறைந்தவர் விஜயபாஸ்கர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9வது நாளாக கொரோனா பாதிப்பு 1,500-ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்று மட்டும் கொரோனாவால் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு மறைத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் தன பதவியில் இருந்து விலக வேண்டும் என டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.