ரஷ்யாவிற்கு நண்பரின் திருமணத்திற்காக சென்ற அமெரிக்க கடற்படையின் முன்னாள் அதிகாரிக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிமன்றம் வழங்கியுள்ளது
அமெரிக்க கடற்படையின் முன்னாள் அதிகாரியான பால் வீலன் என்பவர் தனது நண்பரின் திருமணத்திற்காக கடந்த 2008ஆம் ஆண்டு ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் அவர் தங்கியிருந்த சமயம் திடீரென காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காரணம் கேட்டதற்கு ரஷ்யாவை உளவு பார்த்த குற்றத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் அந்த குற்றசாட்டை முற்றிலுமாக மறுத்து தான் நிரபராதி என்றும் திட்டம் போட்டு என்னை வலையில் சிக்க வைத்திருப்பதாகவும் பால் வீலன் கூறினார்.
மாஸ்கோ நீதிமன்றத்தில் பால் வீலன் மேல் போடப்பட்ட வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்த நிலையில் பால் வீலன் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதாக கூறி அவருக்கு நேற்று நீதிபதி 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதனை அமெரிக்க தூதர் ஜான் சுல்லிவான் கடுமையாக கண்டித்து ரகசிய விசாரணையில் எந்த ஆதாரங்களும் பால் வீலனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், சர்வதேச சட்ட விதிமுறைகள் மற்றும் மனித உரிமைகள் மீறப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த தண்டனை நீதியை கேலி செய்யும் வகையில் இருப்பதாகவும் கூறி பால் வீலனை விரைவில் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளார்.