புதுச்சேரியில் மேலும் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் முதன் முதலில் டெல்லியில் இருந்து மாகி பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து புதுச்சேரியில் கணிசமான அளவிலேயே கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்த பின்னர் பாதிப்பு சற்று உயர்ந்து கொண்டே வருகிறது.
புதுச்சேரியில் நேற்று வரை 216 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 113 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 99 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி 27 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 243 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் முதன்முதலாக அதிகபட்சமாக இன்று 27 நபர்களுக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகம் உட்பட வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு செல்பவர்களுக்கு அதிக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல புதுச்சேரி அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருபவர்களை இ-பாஸ் இருந்தாலும் புதுசேரிக்குள் அனுமதிக்க முடியாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.