சென்னை ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு பணியில் இருந்த 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி கருணாகரன், பெருங்குடிக்கு நியமிக்கப்பட்ட வெங்கடேஷ், ஆலந்தூருக்கு நியமிக்கப்பட்ட எம்.எஸ்.சண்முகம் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது விடுவிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பதில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கொரோனா தடுப்பு பணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரப்பட்டன. வருவாய்த்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
பிறகு, பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டு சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை கடந்த மாதம் 20ம் தேதி தமிழக அரசு நியமித்தது.
குறிப்பாக, கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி, ஒரு காவல் அதிகாரி கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தனர். அதில் 3 மண்டலங்களில் உள்ள சிறப்பு அதிகாரிகளை தற்போது விடுத்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சிறப்பு அதிகாரிகளின் மாற்றம் சற்று சிந்திக்க வைக்கிறது.