பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மலிங்கா வீசிய “நோபால்” விவகாரம் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல்லில் 7-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடியது . இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 48 (33) ரன்களும் சூரியகுமார் யாதவ் 38 (24) ரன்களும், ஹர்திக் பாண்டியா 32 (14) ரன்களும், யுவராஜ் சிங் 23 (12) ரன்களும், டிகாக் 23 ரன்களும் குவித்தனர். பெங்களூரு அணியில் அதிகபட்சமாக சாஹல் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக கடைசி வரை போராடிய டிவில்லியர்ஸ் 41 பந்துகளில் 70* ரன்கள் (6 சிக்ஸர், 4 பவுண்டரி) விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். விராட் கோலி 32 பந்துகளில் 46 ரன்களும், பார்த்திவ் பட்டேல் 22 பந்துகளில் 31 ரன்களும் குவித்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளும், மார்க்கண்டே 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் கடைசி 2 ஓவர்களில் பெங்களூரு அணி வெற்றி பெற 22 ரன்கள் தேவைப்பட்டது. 19 ஓவரை வீசிய பும்ரா 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை மலிங்கா வீசினார். மலிங்கா வீசிய முதல் பந்தை சிவம் டுபே சிக்ஸர் அடித்தார். மேலும் அடுத்தடுத்த 4 பந்துகளில் 1 ரன்கள் எடுக்க கடைசி பந்தில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட பேட்டிங் செய்த சிவம் டுபே 1 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் மலிங்கா வீசிய அந்த பந்து “நோ பால்” என்று போட்டி முடிந்த பின்னர் தான் தெரியவந்தது. அதனை மட்டும் நடுவர்கள் சரியாக பார்த்திருந்தால் அடுத்த பந்து ஃப்ரீ ஹிட் எனவே பெங்களூரு அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும்.
இதனை குறிப்பிட்டு RCB ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டு நவீன மயமாக்கப்பட்டுள்ளது. நிறைய கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படியிருந்தும் இந்த தவறு நடந்திருக்கிறது. நடுவர்கள் இதனை சரியாக பார்த்திருக்க வேண்டும். “மும்பை அணிக்கு கிடைத்த வெற்றி வெற்றியே கிடையாது” என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.