12 நாட்கள் முழு ஊரடங்கிற்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
இந்த முழு ஊரடங்கு முடிந்தவுடன் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் குறையும் என தெரிவித்துள்ளார். சென்னையில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது.
மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அமலபடுத்தப்படுகிறது. அதேபோல, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வரும். செங்கல்பட்டு, மறைமலை நகர் நகராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளிலும், காட்டங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கும் முழு ஊரடங்கு அமலுக்கு வரும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. மேலும், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் அறிவிப்புகளை வெளியிட்டது.