லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார்.
2வது நாளாக முதலமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதையடுத்து பேசிய பிரதமர், இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புகிறது. ஆனால் அத்துமீறினால் பதிலடி கொடுக்கப்படும். பதில் நடவடிக்கையில் ஈடுபட இந்தியா ஒருபோதும் தயங்காது. லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் செய்த உயிர் தியாகம் வீண் போகாது.
வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தான் இரங்கல் தெரிவிக்கிறேன் எனக் கூறியுள்ளார். இந்தியாவை கோபப்படுத்தும் நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். எல்லையை காக்கும் முயற்சியில் இந்தியா ராணுவ வீரர்கள் தீரத்துடன் சண்டையிட்டு உயிர் தியாகம் செய்துள்ளனர்.
ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்தியா அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. பதிலடி கொடுக்கும் சக்தி நாட்டிற்கு உள்ளது. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சுய அதிகாரம் தான் நமது மிகப்பெரிய பலம் என தெரிவித்துள்ளார். இந்தியாவின் துணிச்சல் மற்றும் வீரத்தை பற்றி உலகிற்கே தெரியும் என கூறியுள்ளார்.