சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலாகிறது.
முழு ஊரடங்கு அமலாகும் போது, கண்காணிப்பை தீவிரப்படுத்த தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். நோய் தடுப்பு பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை குறைக்கும் வகையில், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வரும் மக்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய தேவைக்காக வரும் மக்கள் மாஸ்க் அணிவதை மாநகராட்சி அதிகாரி, மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும் எனவும் ஆணை பிறப்பித்துள்ளார். சென்னையில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது.
மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அமலபடுத்தப்படுகிறது. அதேபோல, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வரும். செங்கல்பட்டு, மறைமலை நகர் நகராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளிலும், காட்டங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கும் முழு ஊரடங்கு அமலுக்கு வரும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. மேலும், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் அறிவிப்புகளை வெளியிட்டது. இந்த நிலையில் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.