வேலூர் பாகாயம் அருகே குளிப்பதை மொபைல் போனில் வீடியோ எடுத்து வெளியிடுவதாக மிரட்டியதால் தீக்குளித்த மாணவி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக பலியானார்..
வேலூர் மாவட்டம் பாகாயம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் 10ஆம் வகுப்பு படித்து முடித்திருந்தார். 11 ஆம் வகுப்பு செல்ல இருந்தார்.. இந்நிலையில் தான் அந்த மாணவி வீட்டில் மேற்கூரை இல்லாத பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த கணபதி என்ற தாமஸ் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
பின்னர் அவர்கள் இருவர் மற்றும் பென்னாத்தூரை சேர்ந்த பூனை கண்ணன் என்கிற ஆகாஷ் (22) ஆகியோர் அந்த வீடியோவை வைத்து கொண்டு, அந்த மாணவியிடம் தாங்கள் அழைக்கும்போது நீ வர வேண்டும் என்றும், இல்லையென்றால் சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவு செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்..
இதனால் மனவேதனையடைந்த மாணவி கடந்த 14ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதனைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 90 சதவீத தீக்காயமடைந்த மாணவிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்த சம்பவம் குறித்து பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா, போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 3 பேரையும் கைது செய்தார். இதில் 17 வயது சிறுவன் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மற்ற இருவரும் குடியாத்தம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தான் நேற்று இரவு 11 மணியளவில் 90% தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக காவல்துறையினர் மாற்றியுள்ளனர்.