சென்னையிலிருந்து பொய்யான காரணத்தை கூறி தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில், ஐந்தாவது கட்ட இடங்களில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மீண்டும் தளர்வுகள் நீக்கப்பட்டு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் ஜூன் 19 முதல் 30ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு
தீவிரப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.
அதன்படி, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு மாநிலங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் மருத்துவம், திருமணம், இறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டும் உரிய ஆதாரத்தை சமர்ப்பித்து இ பாஸ் பெற்று செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த அமல்ராஜ் என்ற நபர் கோடையில் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று பொய்யான காரணத்தைக் கூறி சென்னையிலிருந்து அவர் மட்டும் வராமல் அவருடன் சில நபர்களையும் காரில் அழைத்து வந்துள்ளார்.
பின் கோவில்பட்டி அருகே இருக்கக்கூடிய பாண்டவர்மங்கலம் என்னும் ஊருக்கு செல்ல, அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின்பேரில், அவர்களை காவல்துறையினர் கைது செய்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்று உறுதி செய்யப்படாத பட்சத்தில் அவர்கள் மீது தொற்றுநோய் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.