சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழுஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதால் ரேஷன்கடைகள் செயல்பாடாது என உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் ஐந்தாவது கட்ட நிலையை ஊரடங்கு நெருங்கும் போதே அதில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்படவே பாதிப்பு இந்தியாவின் பல பகுதிகளிலும் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்து வந்தது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வர, பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மீண்டும் முழுஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் சார்பிலும், சமூக ஆர்வலர்கள் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி, வருகின்ற ஜூன் 19 முதல் 30ம் தேதி வரை மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண உதவி வழங்க முன்வந்துள்ளது. இந்த ரூபாய் 1000 அவரவர் வீடுகளுக்குச் சென்று வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள ரூபாய் 1000 நிவாரணத் தொகையை வீடுகளுக்கே வந்து வழங்கும் பணியில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட இருக்கிறார்கள். எனவே ஜூன் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை ரேஷன் கடைகள் செயல்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.