இந்திய – சீன எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல முன்னணி நாடுகள், இச்சம்பவம் தொடர்பாக தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில், ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், “இந்திய, சீன வீரர்களுக்கிடையில் ஏற்பட்ட கடுமையான மோதல் கவலையளிக்கிறது. இந்தப் பிரச்னையை இரண்டு நாடுகளும் தாங்களாகவே பேசித் தீர்த்துக்கொள்ள முடியும். சீன-இந்திய எல்லையில் என்ன நடக்கிறது, என்பதை நாங்கள் கவனத்துடன் பார்த்து வருகிறோம்.
இரு நாடுகளும் எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய திறமை உள்ளவர்கள் தான். நாட்டில் பாதுகாப்பை நிலைநாட்டுவதில் இரு நாடுகளும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளுடன் எங்களுக்கு நெருக்கமான உறவு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இந்திய-சீன எல்லை பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கலந்துரையாடினால், விரைவில் பிரச்னை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.