தமிழகத்திலிருந்து ஒடிசா திரும்பிய இளைஞரை அப்பகுதி மக்கள் அனைவரும் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு வற்புறுத்தி 7 நாள்கள் டாய்லெட்டில் அடைத்து வைத்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் ஜகதீஷ்சிங்பூர் மாவட்டம் ஜமுகான் கிராமத்தைச் சேர்ந்த மானஸ்பட்டா (28 வயது) என்ற இளைஞர் தமிழகத்தில் தினக் கூலியாக வேலை பார்த்து வந்தார். கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வேலையிழந்த இவர் சொந்த ஊர் செல்ல விரும்பினார்.
இதற்காக இ-பாஸ் விண்ணப்பித்த அந்த இளைஞருக்கு தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர் எந்தவித அறிகுறிகளுமில்லாமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என எண்ணிய டாக்டர்கள் இவரைத் தமிழகத்திலேயே 7 நாள் தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து வந்தனர்.
இதையடுத்து இவர் குணமடைந்துவிட்டதாகக்கூறி வீட்டுக்குச் செல்ல அனுமதியளித்தனர். அதனைத்தொடர்ந்து இவர் ஒடிசாவுக்கு சென்றார்.. அப்போது அங்கு இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 7 நாட்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறி, அவரது கிராம மக்கள் அவரைக் கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
பின்னர் அந்த இளைஞர் ஒடிசா மாநில அரசின் தனிமைப்படுத்தும் பகுதிக்குச் சென்றுள்ளார். ஆனால் அங்கு போதிய அளவு படுக்கை வசதி இல்லாததன் காரணமாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.. இந்நிலையில், அவரது கிராம மக்கள் மானஸ்பட்டா தமிழகத்தில் 7 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததால், இங்கு மீதமுள்ள 7 நாள்கள் மட்டும் தனிமைப்படுத்திக்கொண்டால் போதும் எனத் தெரிவித்துள்ளனர்..
இருப்பினும், அவரை தனிமைப்படுத்திக்கொள்வதற்கு வீட்டில் போதிய வசதி இல்லை என்பதை அறிந்த மக்கள் வீட்டிற்கு அருகே தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட டாய்லெட்டிலேயே 7 நாட்களும் தங்கி இருக்குமாறு கூறியுள்ளனர். இதன் காரணமாக இளைஞர் மானஸ்பட்டா கடந்த 7 நாட்களாக (ஜூன்9- ஜூன் 15) கழிவறையிலேயே தங்கியிருந்துள்ளார்.