சென்னை, திருவள்ளூரில் இருந்து மதுரை சென்ற 27 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் (ஜூன் 19ம் தேதி) முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் இருந்து செல்பவர்களால் மற்ற மாவட்டங்களில் இருப்பவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ள போதிலும் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூரில் இருந்து ஆம்னி பேருந்தில் மதுரை சென்ற 27 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 27 பேரையும் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.