அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தலையிடும் எண்ணம் இல்லை என சீனா தெரிவித்துள்ளது
அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள் என்ற தலைப்பில் எழுதிய புத்தகம் அடுத்த வாரம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்புத்தகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா அதிபர் ஜி ஜின்பிங்கிடம் 2020 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் வெற்றிபெற தனிப்பட்ட முறையில் உதவி கேட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தகவல் அமெரிக்க பத்திரிகைகளில் வெளியானது.
இதனைத்தொடர்ந்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியனிடம் ஜான் போல்டன் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த தகவல் குறித்து கேட்டபோது, “அமெரிக்காவில் நடக்கும் தேர்தலில் தலையிடும் எண்ணம் சீனாவிற்கு இல்லை” என கருத்து தெரிவித்துள்ளார். சுமார் 17 மாதங்கள் ட்ரம்ப் நிர்வாகத்தில் பணிபுரிந்த போல்டன் அதிபருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பதவியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.