விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேசிகாபுரம் பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தேர்தல் முன்விரோதம் காரணமாக தங்கவேல் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக அதே பகுதியைச் சேர்ந்த புதிய தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர். இதில் 3 மாதம் கழித்து அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்..
இதற்கிடையே, அந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தில் இன்று காலை சக்திவேல், தர்மராஜ் அண்ணன் மற்றும் தம்பி இருவரும் வேலைக்காக பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் மண்வெட்டி, அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியதில் இருவரும் பலத்த காயமடைந்து அதே இடத்தில் விழுந்தனர்.
இது குறித்து தகவலறிந்த தளவாய்புரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் முதலுதவிக்காக தங்கள் வாகனத்தில் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.