ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனஅதிபர் ட்ரம்ப் அவசர காலக்கெடு வைத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருவதற்கு முன்பாக கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க வேண்டும் என அதிபர் அதிகாரிகளை முடுக்கிவிட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. உலக அளவில் மற்ற நாடுகளை விட தொற்றால் அமெரிக்கா அதிக அளவு பாதிப்பைக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிபர் கொரோனா தொற்று பரவலை தடுப்பதில் அதிக கவனம் செலுத்தவில்லை என விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எழுந்து வருகின்றது. இதனால் கொரோனா பரவலுக்கு பிறகு அதிபரின் செல்வாக்கும் சரிந்து வருவதாக சில கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட அவருக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பிடன் களமிறங்குகிறார். தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் அதற்க்கு முன்பாக தடுப்பூசியை கண்டுபிடித்து தொற்றை பரவலை தடுக்க வேண்டும். இல்லையென்றால் அது தனக்கு எதிராகவே திரும்பி விடும் என்ற எண்ணம் அதிபருக்கு இருக்கின்றது. இதனையடுத்து இதுவரை இல்லாத அளவிற்கு விரைந்து தடுப்பூசி கண்டுபிடிக்க “ஆப்ரேஷன் வார்ப் ஸ்பீட்” எனும் திட்டத்தை உருவாக்கி உள்ளார்.
அத்திட்டத்திற்கு மனித சேவைகள் மற்றும் சுகாதாரத்துறை மந்திரியான அலெக்ஸ் அசாரை மேற்பார்வையாளராக நியமித்துள்ளார்.அவருடன் ராணுவ மந்திரி மார்க் எஸ்பரும் இணைந்துள்ளார். அவர்களிடம் இதுவரை இல்லாத அளவு தடுப்பூசியை கண்டறிய அதிபர் ட்ரம்ப் காலக்கெடுவை வைத்துள்ளார் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகின்றனர். கொரோனா தொற்றுக்கு முடிவு நெருங்குவதை தெரியப்படுத்த இந்த வருடத்தின் இறுதிக்குள் தடுப்பூசி கண்டுபிடித்து விட வேண்டும் என்றே அதிபர் விரும்புகிறார் என தெரியவந்துள்ளது.
அவ்வகையில் ட்ரம்ப் காலக்கெடு நிர்ணயித்திருப்பதால், தடுப்பூசி முழுமையான பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டை அங்கீகரிப்பதற்கு கட்டுப்பாட்டாளர் அதிக அளவு அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும் என்ற கவலையும் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து ஊக்குவித்து வருவதும் விஞ்ஞானிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது என தெரியவந்துள்ளது.