Categories
மாநில செய்திகள்

காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி… குஷியில் 10,11ம் வகுப்பு மாணவர்கள்!

10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி அளிக்க தேர்வுத்துறை இயக்குனர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உடனடியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வில் ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி பெறவில்லை என செய்திகள் வெளியான நிலையில் தற்போது தேர்வுத்துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தீவிரம் காரணமாக 10,11,12ம் வகுப்பு தேர்வுகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, ஆல்பாஸ் என்ற அறிவிப்பை மாநில அரசுகள் வெளியிட்டன. இந்த நிலையில், தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு தேர்வுகள், மற்றும் 11 வகுப்பின் விடுபட்ட தேர்வினை நடத்த முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின, மேலும் இதை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது. இதையடுத்து 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என அறிவிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இறுதி மதிப்பெண்களை காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண்கள் கணக்கிட வேண்டும் என தெரிவித்திருந்தது.

மேலும், ஜூலை முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளிலும் பல மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என அதிர்ச்சி செய்தி வெளியானது. இதையடுத்து அனைவரும் ஆல்பாஸ் செய்யப்படுவார்கள் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |