ஜனாதிபதி தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் ட்ரம்பை விட ஜோ பிடன் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி ஜனாதிபதிக்கான தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் குடியரசு கட்சியின் சார்பாக அதிபர் மீண்டும் போட்டியிட, அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பாக ஜோ பிடன் களமிறங்குகிறார். நடைபெறவிருக்கும் இந்த தேர்தலில் யாருக்கு மக்களின் ஆதரவு அதிகம் இருக்கும் என்பது குறித்து பல கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் அமெரிக்காவின் கின்னிபியாக் பல்கலைக்கழகம் மேற்கொண்ட தேசிய அளவிலான கருத்துக்கணிப்பின் முடிவுகளை நேற்று வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தற்போது இருக்கும் சூழலில் யாருக்கு வாக்களிப்பார்கள் என மக்களிடம் கேட்ட கேள்விக்கு, தற்போதைய அதிபரான ட்ரம்புக்கு ஆதரவாக 41 சதவீதம் மக்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பிடனுக்கு ஆதரவாக 49 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளனர். இதனடிப்படையில் 8% டிரம்பை விட ஜோ பிடன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கின்றார். அதைப்போன்று வேலை இழப்பு, கொரோனா தொற்றை கையாண்ட முறை, பொருளாதார சரிவு போன்ற விவகாரங்களில் டிரம்ப் தலைமையிலான அரசுக்கு எதிராக 55 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.