வர்த்தக ரீதியாக இந்தியாவிற்கு முன்னுரிமை வழங்க பரிசீலினை செய்துவருவதாக அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்
இந்தியா-அமெரிக்கா வர்த்தகம் தொடர்பாக இந்தியாவிற்கு முன்னுரிமை வழங்க ஜிஎஸ்பி அந்தஸ்தைப் மீண்டும் கொடுப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அமெரிக்க செனட் நிதிக் குழுவின் உறுப்பினரான அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் ஆப்பிள்களுக்கு 70 சதவீத வரி விதிப்பது வருத்தத்தை கொடுக்கிறது என அவர் அதிருப்தியை பதிவு செய்ததோடு அதிக அளவு வரி விதித்தால் எவ்வாறு இந்தியாவிற்கு ஆப்பிள்களை அனுப்ப முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவது உண்மையே நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் பல மடங்கு அதிக வரி விதிப்பது மேலும் வர்த்தக ரீதியாக நிலைமையை மோசமாக்கிவிடும் என சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவுடன் அதிகளவு வர்த்தக பரிவர்த்தனை மேற்கொள்ள அமெரிக்கா தயாராகத்தான் இருக்கின்றது. வர்த்தக பரிவர்த்தனை மட்டுமல்லாது முதலீடு குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது. இந்தியாவில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாக செனட் சபையின் மற்றொரு உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் மொன்டானா பகுதியில் பருப்பு உற்பத்தி செய்வதால் இந்தியாவில் விதிக்கப்படும் வரியினால் மொன்டானா விவசாயிகள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். அதிலும் இந்தியாவில் இருக்கக்கூடிய பருப்பு வகைகளுடன் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பருப்பு வகைகளால் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். மிகவும் விரும்பப்படும் நாடாக இருந்தாலும் பருப்பு வகைகளுக்கு அதிக வரியை இந்திய விதிக்கின்றது இது தொடர்பாக உலக வர்த்தக மையத்திடம் முறையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.